வடபகுதி கடற்றொழிலாளர்களின் நீண்ட கால வாழ்வாதார பிரச்சினை!

நாட்டின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் அண்மையில் விரிவாக எடுத்துக் கூறி இருந்தார்.

இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். பிரதமருடனான இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது வடமாகாண மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பிரதானமானது இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத ஊடுருவல் ஆகும். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் தங்களது நாட்டு எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதென்பது நெடுங்காலமாக நிலவி வருகின்ற அத்துமீறல் ஆகும். நாள்தோறும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பல நூற்றுக்கணக்கான இந்திய மீன்பிடிப் படகுகளை எமது கடல் எல்லைக்குள் காணக் கூடியதாக இருக்கின்றது.

அவர்கள் வெறுமனே இலங்கைக் கடல் பகுதியில் மீன்களை மட்டும் பிடித்து செல்லவில்லை. அவர்கள் எமது மீனவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் எமது நாட்டின் கடல் வளங்களையும் அழித்துச் செல்கின்றனர். இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள இழுவைப் படகுகள் மற்றும் சிறிய துவாரங்கள் கொண்ட வலைகள் போன்றவற்றையே இந்திய மீனவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றார்கள். இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுவதால் எமது கடல் பகுதியில் உள்ள பவளப் பாறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மீன்களின் பெருக்கம் பாதிக்கப்படுகின்றது. மீன்களின் பெருக்கத்துக்கு பவளப் பாறைகள் மிகவும் அவசியமாகும்.

Related posts