இந்தியாவிலிருந்து வந்த கப்பலின் பணியாளர்களுக்கு கொரோனா!

இந்தியாவிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கப்பலில் இருந்த 17 இந்தியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

குறித்த கப்பலுக்குச் சென்ற இலங்கை பணியாளர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கப்பலிலிருந்த பெரும்பாலான பணியாளர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்படவில்லை என்பதால் அவர்களை மீண்டும் இந்தியாவிற்கே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அவர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலின் பணியாளர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4000 மெட்றிக் தொன் எரிபொருளுடன் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ளதோடு , கடந்த 25 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு இந்த கப்பல் சென்றுள்ளது. இதன் போது கப்பலிலிருந்த பணியாளர்களில் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்ட பின்னரே பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே அனைவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை குறித்த பணியாளர்கள் அனைவரும் கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் கப்பலை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுவரையில் குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

Related posts