மாத்தறையில் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைக்கு கொரோனா!

மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமானப் பணியாளர் குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பிரஜைகள் 15 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக கடந்த 13 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் அவர்களிடம் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அவர்கள் இன்று சீனா பயணமாக இருந்ததுடன், நேற்று முன்தினம் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் PCR பரிசோதனைக்குட்பட்டனர்.

இதனையடுத்து, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யப் பிரஜை சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்கள் ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன், ஹோட்டலின் ஊழியர்கள் குழு ஹபராதுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் தம்புத்தேகம, எம்பிலிப்பிட்டிய, தெனியாய, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் மாலிம்பட ஆகிய பகுதிளைச் சேர்ந்தவர்கள் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

ஹோட்டல் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்ய பிரஜைகள் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி, மனைவி, பிள்ளைகள் இருவர் சகிதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Related posts