நாகர்கோவில் படுகொலை நினைவேந்தல்; அச்சத்தால் நினைவேந்தலுக்கு செல்லாத மக்கள்!

யாழ். வடமராட்சி, நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலயம் மீதான அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலயக் கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்க்கு பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்க்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நாகர்கோவில் கிராமத்திற்கு செல்கின்ற அனைவரும் இராணுவத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆட்கள் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் பழைய மாணவனும் மாணவர்களின் பெற்றோருமான ஆ.சுரேஸ்குமார் இந்த நினைவேந்தலுக்கு செல்லவிடாது பருத்தித்துறை பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நாகர்கோவில் வடக்கு பகுதியெங்கும் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருந்த நிலையில் நாகரகோவிலை சேர்ந்த படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் உட்பட கிராம மக்களும் அச்சம் காரணமாண நினைவேந்தலில் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வு பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலமையில் இடம்பெற்றதுடன் பொது ஈகை சுடரினை படுகொலைக் காலத்தில் அதிபராக பணியாற்றியிருந்த சி.மகேந்திரம் ஏற்றி வைத்து மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தவர்கள் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்ப வழிபாடுகளும் இடம்பெற்றதுடன் அன்னதானமும் இடம்பெற்றிருந்தது.

Related posts