அரசியல் தீர்மானம் மூலம் நினைவேந்தல் தடையை நீக்க முடியும் – சி.வி.கே.சிவஞானம்

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். அக்கடிதம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல “ஜனாதிபதி எந்த விதத்திலும் நீதிமன்ற விடயத்தில் தலையிட முடியாது” என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கருத்து தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று (21) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு சிவஞானம் தெரிவித்தார்.

மேலும் பொலிஸார் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளப்பெறும் பட்சத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நினைவு கூற முடியும். அது எந்த விதத்திலும் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தலையிடுவதாக கருதப்படமுடியாது என்று கூறினார்.

Related posts