தைராய்டு பிரச்சினைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

இன்று பலருக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளது. தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பி. இது உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையைக் கட்டுப்படுத்துகிறது. சீரான உடல் வெப்பநிலை, ஹார்மோன் செயல்பாடு மற்றும் எடை மேலாண்மை ஆகியவை இந்த சுரப்பியில் சில முக்கியமான செயல்பாடுகளாகும்.

பொதுவாக தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவையாவன: ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு. தைராய்டு சுரப்பில் பிரச்சினைகள் இருந்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மேலும் தைராய்டு பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள், இந்த பிரச்சினையை ஒருசில வீட்டு வைத்தியங்களின் மூலம் கையாளலாம். கீழே தைராய்டு பிரச்சினைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை தைராய்டு சுரப்பியின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தேங்காய் எண்ணெயை சூடேற்றாமல் எடுக்கும் போது, அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சமப்படுத்துகிறது. மற்ற வகை எண்ணெய்களைப் போல் இல்லாமல், தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பான ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான சீரான உணவு மூலம், தேங்காய் எண்ணெயை தைராய்டு பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அப்பிள் சீடர் வினிகர்

அப்பிள் சீடர் வினிகர் தைராய்டு ஹார்மோன்களின் சீரான உற்பத்தி மற்றும் வெளிப்பாட்டிற்கு உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தைக் குறைத்து காரத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. அப்பிள் சீடர் வினிகர் உடல் கொழுப்புக்களை சீராக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கவும் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது. அதற்கு அப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அதோடு தேன் சிறிது சேர்த்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

இஞ்சி

தைராய்டு பிரச்சினைக்கான ஒரு எளிய வீட்டு வைத்தியப் பொருள் என்றால் அது இஞ்சி. இது எளிதில் கிடைக்கக்கூடியது. இஞ்சியில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தைராய்டு பிரச்சினைக்கு முதன்மையான காரணமான உள்வீக்கத்தை சரிசெய்ய உதவுகிறது. அதற்கு இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால் அத்தியாவசிய எண்ணெயாகவும் பயன்படுத்தலாம். அதுவும் இஞ்சியை தேங்காய் எண்ணெயில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெயை உடலில் பயன்படுத்தலாம்.

வைட்டமின் பி

வைட்டமின்கள் தைராய்டு பிரச்சினைக்கு காரணமான காரணிகளை எதிர்க்க உதவும். அதிலும் பி வைட்டமின்கள் சீரான தைராய்டு செயற்பாட்டிற்கு அத்தியாவசியமானது. குறிப்பாக வைட்டமின் பி12 ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமானது. எனவே வைட்டமின் பி சத்து நிறைந்த முட்டைகள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், பால், நட்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உணவின் மூலம் அன்றாடம் கிடைக்க வேண்டிய அளவு வைட்டமின் பி சத்துக்களைப் பெற முடியாவிட்டால், விற்றமின்களின் உதவியுடன் பெறலாம்.

வைட்டமின் டி

வைட்டமின் டி குறைபாடும் தைராய்டு பிரச்சினைக்கு வழிவகுக்கும். வெயிலில் சுற்றும் போது உடலால் இந்த வைட்டமினை உற்பத்தி செய்யும் என்பதால், தினமும் குறைந்தது 15 நிமிடம் வெயில் உடலில் படுமாறு செய்யுங்கள். இதனால் கால்சியம் எளிதில் உடலால் உறிஞ்சப்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்திக்கும் நல்லது. மேலும் விட்டமின் டி ஒருசில உணவுகளிலும் உள்ளது. அவையாவன சால்மன் மீன், கானாங்கெளுத்தி மீன், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், முட்டையின் மஞ்சள் கரு. ஆனால் ஒருவருக்கு வைட்டமின் டி உடலில் மிகவும் குறைவான அளவில் இருந்தால், விற்றமின்களை எடுக்க வேண்டியது அவசியம்.

பாதாம்

பெரும்பாலான நட்ஸ்கள் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. அதிலும் பாதாம் தைராய்டு ஹார்மோன்களின் சரியான வெளிப்பாட்டிற்கு உதவக்கூடியவை. மேலும் பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. அதோடு பாதாமில் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு தேவையான செலினியம் அதிகம் உள்ளது. குறிப்பாக தைராய்டு சுரப்பியின் மென்மையான செயல்பாட்டிற்கு தேவையான மக்னீசியமும் இதில் அதிகம் உள்ளது.

பால் பொருட்கள்

பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் தைராய்டு சுரப்பிக்கு நன்மை அளிக்கும் அயோடின் அதிகமாக உள்ளது. இந்த கனிமச்சத்து தான் தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது. தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், அதிலிருந்து விடுபட பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

பீன்ஸ்

பீன்ஸ் ஊட்டச்சத்துக்களின் கூடாரம். இதில் நார்ச்சத்து, புரோட்டீன், அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளும் ஏராளமாக நிறைந்துள்ளன. பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹைப்போ தைராய்டின் பொதுவான பக்க விளைவான மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கும், தைராய்டு சுரப்பிக்கும் நல்லது. இவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதில் ஹைப்போ தைராய்டிசத்தை எதிர்த்துப் போராட உதவும் மக்னீசியம், வைட்டமின் பி12 அதிகமாக நிறைந்துள்ளது.

Related posts