கனடாவில் முன்னெடுக்கப்பட்ட நெடு நடை பயணம் நிறைவு: பிரதமரிடம் மகஜர் கையளிப்பு!

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி கனடாவில் முன்னெடுக்கப்பட்ட நெடு நடை பயணத்தின் நிறைவாக கனேடிய பிரதமரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக கனடாவில் நெடு நடை பயணத்தில் ஈடுபட்டவர்களில் ஏழு பேர் கனேடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவிடம் நேற்று முன்தினம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி மற்றும் நெடு நடை பயணத்தை மேற்கொண்டவர்கள் அந்நாட்டுப் பிரதமரை சந்தித்து மகஜரை கையளித்துள்ளனர்.

மகஜரைக் கையளித்துவிட்டு வௌியில் வந்தவர்களுக்கு கனேடிய பாராளுமன்றத்திற்கு முன்பாகக் குழுமியிருந்த மக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.

இலங்கையிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கோரி கனடாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களால் நீதிக்கான நெடு நடை பயணம் மாண்ட்ரியலில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் திகதி ஒட்டாவாவை நோக்கி ஆரம்பமானது.

அத்துடன், இந்த நெடு நடைப் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒன்டாரியோவிலும் மற்றுமொரு நடை பயணம் முன்னெடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts