மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கும் இலங்கை!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக சீர்செய்யப்பட்ட 18 வது திருத்தத்தின் பிற்கோக்குத்தனமான உள்ளடக்கங்கள், தற்போது 20 ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் கொண்டுவரப்படுகின்றன. இது மீண்டும் நாட்டை நிறைவேற்றதிகாரத்தின் மிகவும் இருண்ட காலப்பகுதிக்கே அழைத்துச்செல்லும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே ஜனாதிபதிக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கக்கூடிய வகையில் அரசாங்கம் நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கின்ற புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.

அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வௌ;வேறு கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில், இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம், ஏற்கனவே நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதியிடம் மேலும் அதிகாரங்களைக் குவிப்பதுடன் அவர் மீதான பரிசீலனைகளுக்குரிய வாய்ப்புக்களையும் இல்லாமல் செய்து அவரை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துகின்றது. இந்தத் திருத்தத்தின் விளைவாக அரசின் அதிகாரங்கள் ஜனாதிபதி என்ற தனியொரு நபரை நோக்கி வெகுவாக சாய்கின்றது.

அதுமாத்திரமன்றி ‘ஜனநாயக ரீதியான ஆட்சிநிர்வாகம் மற்றும் முக்கிய அரச கட்டமைப்புக்களை மேற்பார்வை செய்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது’ என்று ஐக்கிய நாடுகள் சபையினால் வரவேற்கப்பட்ட அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட பெரும்பாலான மறுசீரமைப்புக்களை 20 வது திருத்தம் இல்லாமல் செய்கிறது.

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டதுடன் அது ஜனாதிபதியின் பதவிக்காலம், பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான இயலுமை உள்ளடங்கலாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறித்தளவான வரையறைகளை ஏற்படுத்தியது.

அதுமாத்திரமன்றி சட்டவழக்குகளுக்கு உட்படுவதில் ஜனாதிபதி விலக்கப்பட்டிருந்தமையும் இந்தத் திருத்தத்தில் நீக்கப்பட்டது. மேலும் 19 வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புப்பேரவை உருவாக்கப்பட்டதுடன் நீதிபதிகள், சட்டமாதிபர், பொலிஸ்மாதிபர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான நியமனங்களைச் செய்வதற்கு ஜனாதிபதிக்குக் காணப்பட்ட அதிகாரங்களும் கட்டுப்படுத்தப்பட்டன.

19 வது திருத்தத்தின் ஊடாக சரிசெய்யப்பட்ட 18 வது திருத்தத்தின் பிற்கோக்குத்தனமான உள்ளடக்கங்கள், தற்போது 20 ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் கொண்டுவரப்படுகின்றன. மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளித்தல் போன்ற விடயங்களில் கடந்த காலங்களில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரக் கட்டமைப்பு மிகமோசமான பிரதிபலிப்பையே காண்பித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்புத்திருத்தம் நிறைவேற்றதிகாரத்தின் மிகவும் இருண்ட காலப்பகுதிக்கே நாட்டை மீள அழைத்துச்செல்வதற்கு வழிவகுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts