திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வு!

ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் நிலைமை தொடர்பில், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில், நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமனற் உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட மேலும் சிலர் இணைந்து யாழ்ப்பாணத்தில் முக்கியமான கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

நினைவேந்தலுக்கு அனுமதியளிக்குமாறுகோரி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், நேற்றைய தினம் இரண்டு நகர்த்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்ட நீதவான், மத அனுட்டானங்களை கடைபிடிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என தெரிவித்ததுடன், திலீபன் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரதிநிதித்துவம் செய்ததன் காரணமாக அவரை, நினைவுகூற அனுமதிளிக்க முடியாது என்று தெரிவித்து, நினைவேந்தலுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேநேரம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றங்களும் தடை விதித்து உத்தரவுகளை பிறப்பித்திருந்தன.

இந்த நிலையிலேயே, நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Related posts