தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

முச்சக்கர வண்டிகளுக்கும், உந்துருளிகளுக்கும் இன்று முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமாயின், பேருந்து முன்னுரிமை ஒழுங்கை முறைமையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிப்பினும், பேருந்து, முச்சக்கர வண்டி, உந்துருளி என்பன இன்று முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு நகரில் தற்போது இடம்பெறும் ஒத்திகை நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், ஒழுங்கை முன்னுரிமை முறைமையை மீறும் சாரதிகளுக்கு எதிராக 2 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சாரதிகள், வீதி ஒழுங்கு விதிகளை பின்பற்ற தவறுகின்றமையே, வாகன நெரிசலுக்கு பிரதான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பகுதிகளில், பாரிய பிரச்சினையாக ஏற்பட்டுள்ள வாகன நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக நேற்று முன்தினம் முதல் இந்த ஒழுங்கை முன்னுரிமை முறைமையை காவல்துறை மீள நடைமுறைப்படுத்தியுள்ளது.

Related posts