நாட்டின் பொருளாதார உண்மை நிலையை அரசு மறைக்கிறது: எரான் விக்கிரமரத்ன!

அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான உண்மை தகவல்களை தெரிவித்தாலே அது தொடர்பில் தீர்வுக்கான முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொருளாதார பிரச்சினை தொடர்பில் பேசும் போது , அரசாங்கம் தாம் ஆட்சிக்கு வரும்போதே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்ததாகவே காண்பித்து வருகின்றது. ஆனால் அது உண்மையல்ல, சாதாரணமாக பொருளாதார வளர்ச்சி வீதமானது 6 சதவீதமாக இருந்த காலமும் இருக்கின்றது. எமது அரசாங்கத்தின்போது அது 3 சதவீதம் என்னும் பெறுமானத்தில் காணப்பட்டது.

ஆனால், அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் அரசாங்கத்தை அமைத்து முதல் காலாண்டிலே பொருளாதார வளர்ச்சி வீதமானது மறை 1.6 சதவீதத்தால் குறைவடைந்தது. கடந்த மார்ச் மாதம் இறுதிவரையான காலப்பகுதியிலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு கொவிட்-19 வைரஸ் பரவலையும் காரணம் காட்ட முடியாது. ஏன்றால் நாடு மார்ச் மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே மூடப்பட்டது. மார்ச் மாதத்துக்கு முன்னரே இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடனே வரி குறைப்பை செய்திருந்தது. இதன்போது நாட்டின் வருமானமானது மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் குறைவடைந்திருந்தது. அதற்கமைய 500 – 700 பில்லியன் ரூபாவுக்குள் வீழ்ச்சியடைந்திருக்கும் என்று கருதமுடியும். இதனை உறுதியாக கூறமுடியாது. காரணம் அரசாங்கம் இன்னமும் அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் வெளியிடவில்லை.

ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் அரச வருமானம் 28 தொடக்கம் 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அமது அரசாங்கத்தில் வரவு செலவு தொடர்பான செலவு வீதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் போல் , அரச வருமானத்தையும் அதிகரித்திருந்தோம். ஆனால் , தற்போது வரவு செலவு திட்டத்தில் செலவு வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் கடன்தொகை மாத்திரம் 1000 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 35 வருடங்களுக்கு பின்னர் பெருந்தொகையான  செலவை கொண்ட வரவு செலவு திட்டம் இம்முறைதான் முன்வைக்கப்படும். இந்நிலையில் கொவிட் – 19 வைரஸ் பரவல் , உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் , இடைக்கால அரசாங்கம் , வெள்ளப் பெறுக்கு மற்றும் வரட்சி போன்ற விடயங்களை இதற்கு காரணம் காட்டலாம். ஆனால் பிரதான காரணம் இந்த அரசாங்கத்திடம் முறையான கொள்கைத்திட்டமொன்று இல்லாததே.

வெளிநாடுகளில் வைரஸ் பரவலினால் அந்நாட்டு நிறுவனங்கள் மூடப்படும் போது , அரசாங்கம் அந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்காக 50, 75 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்தது. ஆனால், இவ்வாறான திட்டங்களை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அதற்கான வசதிகளும் அவர்களிடம் இல்லை. இன்று உணவுப் பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. வரி குறைக்கப்பட்டால் அதன் பயன்களை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு எந்த பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

Related posts