அமெரிக்க பகிரங்க தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார் செரீனா!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டமொன்றில் விக்டோரியா அஸரெங்காவிடம் தோல்வியடைந்த செரீன தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன் மூலம் செரீனா வில்லியம்ஸின் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு நழுவிப் போனது.

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அஸரெங்கா ஆகியோர் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-1 என முன்னிலை வகித்த செரீனா, அதற்கடுத்த இரண்டு செட்களையும் 3-6, 3-6 என இழந்து தொடரை விட்டு வெளியேறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க ஓபன் தொடரில் இறுதி போட்டி  வரை முன்னேறிய செரீனா இந்த முறை அரையிறுதியோடு சென்றுள்ளார்.

Related posts