திலீபன் நினைவேந்தலில் கட்சி பேதமின்றி நாமும் இணைக்கிறோம்: தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி

தியாகதீபம் திலிபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து எமக்கான நீதியின் சாட்சியாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து நடைபவணி இடம்பெறவுள்ளது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற இளைஞர்கள் அனைவரும் கட்சி பேதங்களற்று ஒன்றிணைந்து இதனை நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் இதற்கு பூரண ஆதரவினை நல்குகின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபன் அவர்களின்; நினைவினை முன்னிட்டு தாயக இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவணிக்காக ஆதரவு வழங்குவது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாயக இளையோர் சமூகம் ஆரம்பித்திருக்கின்ற முன்னுதாரணமான செயற்பாட்டினை வரவேற்கின்றோம். எமது மக்கள் விடுதலைக்காகவும், எமது மண்ணின் விடிவுக்காகவும் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசிற்கும், இந்திய அரசிற்கும் எமது மக்களின் செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அகிம்சை ரீதியில் உண்ணாவிரம் இருந்து எமது இனத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலிபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து எமக்கான நீதியின் சாட்சியாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து நடைபவணி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற்று யாழ்ப்பாணம் தியாகதீபம் திலிபன் அவர்கள் நினைவிடத்தில் நிறைவடைய இருக்கின்றது.

குறிப்பாகச் சொல்லப் போனால் வடக்கு கிழக்கில் இருக்கின்ற இளைஞர்கள் அனைவரும் கட்சி பேதங்களற்று ஒன்றிணைந்து இதனை நிறைவேற்ற வேண்டும். தற்போதிருக்கின்ற அரசியற் சூழல் எமக்கு வித்தியாசமான செய்திகளைச் சொல்லுகின்ற இந்தத் தருணத்தில் தமிழ்த் தேசியத்திற்காக தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் நாம் இருக்கின்றோம். குறிப்பாகத் தமிழ்த் தேசியத்தோடு இருக்கின்ற கட்சிகளின் உறுப்பினர்கள், தலைவர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம். அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் இதற்கு பூரண ஆதரவினை நல்குகின்றோம்.

இதேவேளை ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related posts