சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம்; சிசிடிவி காட்சி ஆய்வு!

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரக அலுவலகத்தில் சேவையாற்றும் கானியா பனிஸ்டர் பிரான்சிஸ் பொய் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணை அறிக்கையை நவம்பர் மாதம் 5ம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கானியா பனிஸ்டர் பிரான்சிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

குறித்த விசாரணை தொடர்பாக இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 607 மணித்தியாலங்கள் கொண்ட சி.சி.ரி.வி. காணொளிகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இரசாயன பகுப்பாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கையை வழங்க 10 மாத காலம் செல்லும் என அவர் தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

இதன்போது நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த பெண் கடத்தப்பட்டதாக கூறும் தினத்தில் அவர் பம்பலபிட்டிய, பெல்மைரா பகுதியில் உள்ள அவரின் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலிருந்து செல்வது முதல் காலி வீதியூடாக மாளிகாகந்தையில் உள்ள அவரது வீட்டிற்கு வரும் வரையிலான காட்சிகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது பிரதான நீதிவான் குறித்த விசாரணை தொடர்பாக மிக முக்கியமான சி.சி.ரி.வி. காணொளிகளை மாத்திரம் பகுப்பாய்வு செய்தால் போதுமானதாக இருக்கும் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனடிப்படையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி முதல் 06.30 மணி வரையான காலப்பகுதிக்குட்பட்ட காணொளிகளை மாத்திரம் பகுப்பாய்வு செய்து அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts