மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் !

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பகுதிகளில் இன்றிரவு 150 மில்லி மீற்றர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டை சூழ மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் (07) இந்த வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறு படகுகள் மற்றும் ஒருநாள் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளுக்கு நாளை நண்பகல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பலத்த காற்று காரணமாக இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இன்று மாலை வீசிய பலத்த காற்றினால் காலி – உனவட்டுன பஹலவெல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts