கட்டாரில் குறைந்தபட்ச மாத ஊதியம் 25 சதவீதம் அதிகரிப்பு!

அரபு நாடான கட்டாரில் தொழிலாளா் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி குறைந்தபட்ச மாத ஊதியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1000 ரியால்களாக (இலங்கைமதிப்பில் சுமாா் ரூ.49,500) ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தொழிலாளா்கள் வேறு பணிக்கு மாறுவதற்காக தங்கள் முதலாளியின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச ஊதியம் என்பது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். அதில் எவ்வித பாகுபாடும் கிடையாது என்று அந்நாட்டு தொழிலாளா் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தவிர தொழிலாளா்களுக்கு தங்குமிடம், உணவு வசதி நிறுவனமே அளிக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 800 ரியால் (இலங்கை மதிப்பில் சுமாா் ரூ.39,600) மாத ஊதியம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டாரின் இந்த முடிவை ஐ.நா. தொழிலாளா்கள் நலப் பிரிவு வரவேற்றுள்ளது. அரேபிய பிராந்தியத்தில் எவ்வித பாகுபாடுமின்றி குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயித்த முதல் நாடு கட்டார் என்று சா்வதேச தொழிலாளா் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஒரு பணியில் இருந்து விடுபட்டு வேறு பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் முதலாளியின் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இது வெளிநாடுகளில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. இந்நிலையில் புதிய சட்டத்திருத்தத்தின் படி இனி தொழிலாளா்கள் அவ்வாறு அனுமதி பெறத் தேவையில்லை. இந்த புதிய அறிவிப்புகள் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts