காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அண்மையில் லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதென, லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களுள், நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு தலையிலும் மற்றையவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

தலையில் காயம் ஏற்பட்டவர் துப்புரவு பிரிவில் பணியாற்றுபவர் என்பதுடன், மற்றையவர் வீடொன்றில் பணிபுரிவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் தேடியறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லெபனானில் 25,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 4ஆம் திகதி லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் 6 வருடங்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த  வெடிப்பொருள்கள் திடீரென வெடித்ததால் 130க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts