மீன் இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகையைக் குறைக்கத் திட்டம்!

வருடாந்தம் மீன் இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகையைக் குறைப்பதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மீன், கருவாடு, மாசி மற்றும் டின் மீன் இறக்குமதிகளுக்காக வருடாந்தம் சுமார் 500 மில்லியன் டொலர் நிதியை அரசாங்கம் செலவு செய்வதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடித்துறையின் பங்களிப்பு 1 வீதமாகக் காணப்படுகின்றது.

நாட்டில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதன் மூலம் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை குறைத்துக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, உள்ளூர் நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நிய செலாவணியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் அல்லது கப்பல்களுக்கு சேவைகளை வழங்க முடியாத அளவிற்கு, இலங்கை கடற்றொழில் திணைக்களம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts