பாடசாலை மாணவர்களுக்கு பாரம்பரிய அரிசிக் கஞ்சி!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலிற்கு பதிலாக பாரம்பரிய அரிசிக் கஞ்சி வழங்குவது தொடர்பில், கமத்தொழில் அமைச்சில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் போதுமானளவு பால் உற்பத்தி இல்லை என்பதாலும், பாடசாலை மாணவர்களின் போஷாக்கு குறைபாட்டிற்கு தீர்வாகவும், இத்திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கமத்தொழில் அமைச்சின் தலைமையின் கீழ், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் நேற்று (27) பத்தரமுல்லையிலுள்ள ‘கொவிஜன மந்திரய’ இல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போஷாக்கு குறைபாட்டுடன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இக்கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கானதொரு தீர்வாக பாரம்பரிய அரிசியினால் தயாரிக்கப்பட்ட கஞ்சியை வழங்குவது முக்கியமானது என, அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள கமத்தொழில் அமைச்சர், இதன் சாத்தியக்கூறு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts