தாயின் உடல் பருமன் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்!

தாயின் உடல் பருமன் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உணவு பழக்கவழக்க முறை, செய்யும் வேலை ஆகியவற்றால் பலரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே உடல் எடை அதிகரித்து காணப்படும் குழந்தைகளையும் தற்போது அதிகமாக பார்க்க முடிகிறது. இதற்கு மரபுவழி பிரச்னைகள், குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது.

என்.ஒய்.யு கிராஸ்மன் ஸ்கூல் ஒஃப் மெடிசின் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனுக்கும், மூளையின் செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறுகின்றனர். உடல் பருமன் குறித்த இவர்களின் புதிய ஆய்வு, குழந்தை உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியில் தாயின் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை இந்த புதிய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

அதாவது, அதிக பி.எம்.ஐ உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு, குறைவான அறிவாற்றல் அல்லது நினைவுத் திறனில் சிறு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பேராசிரியர் டாக்டர் மோரியா தாமசன் கூறினார்.

உடல் பருமனுக்கும், மூளை வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் முந்தைய ஆய்வுகள் பெரும்பாலும், குழந்தை பிறந்தபின்பு அவர்களின் உடல் பருமன் மாற்றங்களை பற்றிக் கூறுகின்றன. ஆனால், இந்த புதிய ஆய்வு, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது. ஆறு மாத கருவில் இந்த மாற்றத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படத் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலமாக குழந்தைகள் வளர்ச்சி தொடர்பான ஆரம்பகால விளைவுகளை முன்கூட்டியே அறிய உதவும் என்றும் கூறினர். இதற்காக 25 வயது முதல் 47 வயது வரையிலான 109 கர்ப்பிணி பெண்கள் ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை கர்ப்பமாக இருந்தனர்.

தேசிய சுகாதார நிறுவனங்களின்படி, பெண்களுக்கு பி.எம்.இ 25 அல்லது அதற்கு மேல் இருந்தால் அதிக எடை கொண்டவர்களாகவும், பி.எம்.ஐ 30 மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருந்தால் ‘உடல் பருமன்’ கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

தாயின் உடல் பருமனால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து, எதிர்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

Related posts