உலகெங்கும் கொரோனா தொற்று உயிரிழப்பு 800,000

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை 800,000ஐ தொட்டது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் கொவிட்–19 தொற்றினால் சுமார் 5,900 பேர் உயிரிழப்பதாக ரோய்ட்டர்ஸ் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு 246 பேர் அல்லது 15 விநாடிகளுக்கு ஒருவர் உயிரிழக்கின்றனர்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை நிலையாக இருப்பதோடு 700,000 இல் இருந்து 800,000ஐ தொட 17 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. அதுவே 600,000 இல் இருந்து 700,000ஐ தொடவும் இதே அளவு காலம் எடுத்துக்கொண்டுள்ளது.

உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 170,000ஐ எட்டியது. அமெரிக்காவில் கடந்த ஜூலையில் நோய்த் தொற்று சம்பவங்கள் உச்சத்தை தொட்டபோதும் தற்போதும் அங்கு வாரத்திற்கு 360,000க்கும் அதிகமான புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன.

நாட்டின் சில பகுதிகளில் நோய்த் தொற்று சுமார் இருபது வீதமாக அதிகரித்திருந்தபோதும் பல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொவிட்–19 தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவாகி ஐந்து மாதங்களின் பின் கடந்த திங்கட்கிழமை அந்த எண்ணிக்கை 50,000ஐ தொட்டது.

உலகில் இரண்டாவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடான பிரேசிலில் உயிரிழப்பு 100,000ஐ தாண்டியுள்ளது.

அங்கு நோய்த் தொற்று இன்னும் உச்சத்தைத் தொடாத நிலையில் பெரும்பாலான நகரங்கள் மீண்டும் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Related posts