செல்வச் சந்நிதி ஆலய வரலாறு!

ஆலயத்தின் ஆரம்பகால தோற்றம்

selvasannitti 400
ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .

இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கதுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கின்றது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள்.

இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது. ஆகம விதிக்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகின்றது.

46700 1572517631214 1183736038 31632370 1367972 n

இங்கே முருகன் ”பூரணம்” என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கின்றார். இதைக் கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி ‘செல்வச் சந்நிதி மேவிய பூரணனே’ என்றும், ‘செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே’ என்றும், ‘பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்’ என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார்.

சின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும். இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூக வரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு.

இங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடிய தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன் சங்கமிக்காது ‘வல்லிநதி’ என்னும் பெயருடன் மிளிர்ந்தது.

இதற்குச் சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லைவெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகின்றது.

இந்நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது.

அரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது. நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன்நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது.

இவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. அதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் ‘உப்பு மால்’ என்று இன்றும் அழைக்கப்படுகின்றது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.

ஒல்லாந்தர் காலத்துடனேயே இலங்கையின் காணிகளுக்கான பதிவேடுகள் எனக் கூறப்படும் ‘தோம்பு’எனும் காணி உறுதிகள் பிறந்தன இக்காலத்தில் பதியப்பட்ட தோம்புகள் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தோற்றத்திற்குரிய முதல் எழுத்து வடிவமான சாதனமாகும். அதன் பின்னர் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர் இலங்கையின் கண் காணப்படும் ஆலயங்கள் எல்லாவற்றையும் நல்ல முறையாகப் பதிந்து ‘ஆலயப் பதிவேடு’ என்னும் பதிவேட்டின் மூலம் பதிந்தனர். இதில் பெருமைமிக்க செல்வச் சந்நிதி ஆலயத்தின் தோற்றம் தொடக்கம் அமைப்பு நடைமுறை என்பவற்றை குறித்து வைத்தனர்.

இவர்களின் பதிவேட்டின் துணையைக் கொண்டு செல்வச் சந்நிதி ஆலயத்தின் உற்பத்தி வரலாறு (ஆரம்ப வரலாறு) குருகுல பரதவம்ச மருதர் கதிர்காமருடன் தொடங்கி மிளிர்ந்ததை ஆணித்தரமாக அறியக்கூடியதாக உள்ளது. இவ் ஆற்றங்கரையிலும் ஆற்றங்கரையை அடுத்தும் பரத வம்சம் என்று கூறப்படும் குருகுலத்தவரே குடியிருந்தனர். இன்றும் இவர்களே வாழ்ந்து வருகின்றனர். இவர்களைத் தவிர வணிக நோக்கத்திற்காக வந்தேறு குடிகளாய் இருந்தவர்கள் காலப் போக்கில் கந்தப் பெருமானது சீற்றத்திற்கு ஆளாக்கப்பட்டு அடியோடு அழிந்து ஒழிந்து போயினர். இப் பரத குலத்தவரின் தெய்வமாகிய முருகக் கடவுளே ‘வேல்’ ரூபத்தில் இச் செல்வச் சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்டுள்ளார்.

san8

இப்பரத குருகுல வம்சத்தின் குல தெய்வமாகிய முருகனை கந்தசுவாமியார் என்றும் கூறி வந்துள்ளனர். இப்பெயரினைக் கொண்டிருந்த காரணத்தாலும் இங்கே ஒளி விட்டு பிரகாசிக்கும் கருணை பக்தி அருள் ஆகியவற்றாலும் முருகன் அடியார்கள் குடிகொண்டிருக்கும் பெருமானை ‘ஆற்றங்கரையானை’ ‘ஆற்றங்கரை வேலன்’ கல்லோடையான்(இதன் அருகில் கல்லோடைஉள்ளது.) ‘கல்லோடைக் கந்தன்’ ‘அன்னக்கந்தன்'(அன்னம் தினந்தோறும் கிடைப்பதால்) ‘அன்னதானக் கந்தன்’ என்றும் அழைத்து பாடிப் பணிந்து பரவி நின்றனர்.

இன்றும் இத்திருப்பெயர்களைக் கூறி அடியார்கள் வணங்குவதை இவ்வாலயத்தில் கண்ணால் காணக் கூடியாதகவும் காதால் கேட்கக்கூடியதாகவும் உள்ளது. கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் ஆலயத்திற்கு பக்தி மணம் கமழும் தெய்வீக வரலாறு உண்டு.

திருச்செந்தூர் என்னும் பதியில் இருந்து கந்தப் பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரா புரிக்கு சூரனிடத்து தூதனுப்பினார். தூதுவனான வீரவாகு தேவர் முதல் முதலாக வட இலங்கையின் வல்லி நதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் இவரது திருப்பாதம் பூமியின் கண் பதிந்த போது கல்லோடையாக காணப்படும் இடத்தில் பாதச் சுவடுகள் தோன்றின.

thondaimanaru map

இவ்வாறு வீரவாகு தேவரது பாதச் சுவடுகளை இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் பாதச் சுவடுகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. வீரவாகுத் தேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திரா புரிக்கு சூரனிடத்துச் சென்று திரும்பி திருச்செந்தூர் செல்வதற்கு மீண்டும் இந் நதிக் கரைக்கு வந்தார்.  வந்தபொழுது சந்திக் காலமாகி விட்டது எனவே அவருக்கு கந்தப் பெருமானுக்குரிய சந்திக்கால பூசை செய்ய வேண்டிய பணி மனத்தில் எழுந்த காரணத்தால் இவ் வல்லி .நதிக்கரையில் எம்பெருமானுக்குரிய சந்திப் பூசையை செய்து வழிபட்டார். இவ்வாறு வீரவாகு தேவரால் சந்திக்கடன் செய்யப்பட்ட இடம் சந்நிதியாக மருவி செல்வச்சந்நிதி என்று திருப் பெயரைப் பெற்றது.

அன்று முதல் சகல செல்வம் அனைத்தையும் தனது திருவருளினால் வழங்கும் கந்தப் பெருமான் வீற்றீருக்கும் பதியாக தோற்றியது. இச் செல்வச்சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்ட கந்தப் பெருமானை தேவலோக காந்தருவர் ஒருவர் மனக் கோயில் சமைத்து இடை விடாத மௌன தியானத்தின் மூலம் முத்தியடைந்து இறைவனது பாதார விந்தத்ததை போய்ச் சோர்ந்தார்.

அதன் வரலாற்றை நோக்கினால் ‘ஐராவசு’ என்ற தேவலோக காந்தருவர் வியாழபகவானது கட்டளைப்படி ஒழுகாது தவறியமைக்காக பகவான் ‘நீ பூமியின் கண் பிறக்கக்கடவாய்’ என்று சாபமிட்டார் இச் சாபத்திற்கு ஆளாகிய ஐராவசு மேலுலகமாகிய தேவலோகத்தில் இருந்து கீழ் உலகமாகிய பூமியின் கண் பிறந்து அல்லலுற வேண்டியதன் நிலையை உணர்ந்து தனக்கு சாப விமோசனம் தரும் படியும் தன்னை இரட்சிக்கும் படியும் பகவானை வேண்டி வணங்கினார்.

அதற்குப் பகவான் தனது சாபத்தை மாற்ற முடியாதென்றும் நீ பூமியின் கண் கதிர்காமத்திற்குப் பக்கத்தில் உள்ள காட்டில் யானையாக அவதரித்து வரும்போது கதிர்காமக் கந்தனை வணங்க வரும் சிகண்டி முனிவரால் சாப விமோசனம் பெற்று சந்நிதி சென்று தியான வழிபாடு செய்து சமாதி அடைவதன் மூலம் இறைவனது பாதர விந்தத்தை பற்றுவாய் என்று கூறினார்.

இதன் பிரகாரம் கதிர்காமத்திற்கு அயலில் உள்ள காட்டில் ஐராவசு யானையாக அவதரித்து வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இவ் யானைக்கு யானைத்தீ என்ற நோய் பீடிக்கலாயிற்று இதன் காரணமாக யானையானது காடுகள் மரங்கள் உயிரினங்கள் பலவற்றையும் அழித்துக் கொண்டிருந்தது.

இது இவ்வாறு இருக்க தேவலோகத்தில் உள்ள இசைப் பிரியனாகிய சிகண்டி எனும் முனிவர் முத்தமிழ் முதல்வாரன சுப்பிரமணியப் பெருமானை அணுகி அடியேன் இசை நுணுக்கங்களை மேன்மேலும் அறிய விருப்புடையேன் ஆகி இருத்தலால் அவற்றை அறியத் தருமாறு வேண்டினார்.

அதற்கு எம் பெருமான் யாம் முத்தமிழ் வித்தகரான அகத்திய முனிவருக்கு உபதேசித்துள்ளோம். அவர் தென் பொதிகை மலையில் இருப்பதால் அவரிடம் சென்று கேட்டு அறியும் படி திருவாய் மலர்ந்தருளினார். இதன் பிரகாரம் சிகண்டி முனிவரானவர் பொதிகை மலை சென்று அகத்தியரிடம் இசை நுனுக்கங்களை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் கந்தப் பெருமானை கதிர்காமத்தில் கண்டுகளித்து தரிசனம் பெற கதிர்காமம் நோக்கி புறப்பட்டார். அவர் கதிர்காமம் நோக்கி காடுகளினுடாக வந்துகொண்டிருக்கையில் யானைத்தீ என்ற நோயால் பீடிக்கப்பட்ட யானையானது காடுகள் மரங்கள் முதலியவற்றை அழிவு செய்துகொண்டிருப்பதைக் கண்டார்.

அவ் யானையானது இவரையும் இவரது சீடர்களையும் கொல்வதற்கு பிளிற்றிக் கொண்டு இவர் முன் எதிராக காடுகளையும் தருக்களையும் அழித்து வந்துகொண்டிருந்தது இதனைக் கண்ணுற்ற இவரது சீடர்கள் முனிவரை அனுகி தேவரீர் எங்களை காத்தருள்க என்று வேண்டி நின்றனர். அவ் வேளையில் முனிவர் தனது ஞான சிருஸ்டியினால் இவ் யானையினது பூர்வீக பிறப்பை நோக்கியபோது அதில் வியாழ பகவானது சாபத் தன்மையும் விமோசனத்தையும் அறிந்து கொண்டார். அந்த மாத்திரத்தே கதிர்காமக் கந்தப் பெருமானை மனத்தில் தியானித்துக் கொண்டு ‘சடாச்சர’ மந்திரத்தை உச்சரித்து அருகில் இருந்த வெற்றிலையை தன் கையினால் நுள்ளி எடுத்து இவ் வெற்றிலையானது வேலாகச் சென்று அழிக்குக என்று கூறி விடுத்தார்.

san9

அவ் வெற்றிலையானது சுப்பிரமணிய கடவுளின் திருவருளினால் கதிர்வேலாக மாறிச் சென்று யானையினது உடலைக் கிழத்தது. கிழித்த மாத்திரத்தே யானையானது அவ்விடத்தில் வீழ்ந்தது அவ்வாறு வீழ்ந்த இடத்தில் ஒரு தேவ உருத்தோன்றி’ ஐயனே நான் முன்பு தேவலோகத்தல் ஐராவசு எனும் காந்த ரூபானாய் இருந்தேன். வியாழ பகவானது சாபத்தின் காரணமாக இவ்வாறு யானை உருவில் இப் பூமியின் கண் பிறந்து நீண்ட காலமாக வருத்தமுற்று வந்துள்ளேன் தேவரீர் விட்ட வெற்றிலையானது கதிர்வேலாயுத கடவுளின் திருவருள் வேலாக மாறி எனது உடலை ஊடுருவிச் சென்றதால் எனது சாபம் நீங்கிற்று’ என்று கூறி பணிந்து நின்றார்.

இதைக்கண்ணுற்ற முனிவரும் அவரது சீடர்களும் மற்றையோரும் ஆச்சரியம் அடைந்து பக்திர சக்திமூர்த்தியே என பரவிப் பணிந்து வணங்கினார்கள். இதன்பின்னர் ஐராவசுவை தம்மைப்போன்ற முனிவர்களான தமது சீடர்களுடன் கதிர்காமக் கந்தப் பெருமானை நோக்கிச் செல்லலானார்கள். அவ்வாறு சென்று வேலை முடிந்தது என்று கூறி சிகண்டி முனிவர் பெருமானிடத்தும் ஐராவசு முனிவரிடத்தும் விடைபெற்று சீடர்களுடன் கோயிலை நோக்கி செல்லலானார். அவ்வேளையில் ஜராவசு முனிவர் தன்னையும் ரட்சிக்கும்படி கேட்டபோது அந்தப் பெருமான் நமது வீரவாகுதேவர் இவ் ஈழத்தின் வட கரையினை வல்லி நதிக்கரையோர்த்தில் எனக்குத் சந்திக்கடன் செய்து வழிபாடு செய்தார். அவ்விடத்தில் புனிதத்தை மேலோங்குவதற்காக செய்த வழிபாடு மௌன வழிபாட்டின் மூலம் பூசைகள் செய்து தியானத்தின் மூலமாக எனது பாதார விந்தத்தை வந்தடைவாய் என்று கூறி திருவாய்மலர்ந்தருளினார். இதன் பிரகாரம் ஜராவசு முனிவர் வடக்கே உள்ள வல்லி நதிக்கரைக்கு வந்து எம்பெருமான் கூறியவாறு வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்து இடத்தில் இருந்துகொண்டு மனக் கோயில் செய்து வரலானார். முந்தை வினை அறுக்க பெருமானார் முத்தியை கொடுத்தருளினார்.

ஜராவசுமுனிவர் தியான வழிபாடு செய்து தவம் இயற்றிய இடத்தில் முத்தியடைந்தார். இந்த இடம்தான் வல்லிநதிக்கரையில் உள்ள பூவரசம் மரத்தின் அடியாகும். அவ் முனிவர் சமாதி அடைந்த இடத்தில் காணப்பட்ட பூவரசம்மரமானது பெரியவிருட்சமாகி தொழும் அடியார்களது துன்பத்தை அகற்றும் தெய்வத்தன்மை பெற்றது அம் மரத்தின் அடியிலே தோன்றிய பூவரசுமரமானது இன்னும் இக்கோவில் நடுவில் காணப்படுகின்றது. இதைப்பற்றி கூறிய பக்தி சிரோன்மணி வேதநாயகப்பிள்ளை சொல்லலானார் செல்வச்சந்நிதி பூவரசைத் தொமும் அடியார்கள் பல்லாயிரத்துன்பம் எல்லாம் அகல பரிவுடனே……என்று பாடினர் இம்முனிவர் முத்தியடைந்து சமாதி அடைந்த பூவரசமரத்து அடிக்கு அருகிலேயே வீராகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்திலே இன்று பக்திரச்சக்தி முகூர்த்தத்தில் கந்தப்பெருமான் வேல் ரூபத்தில் கோயில்கொண்டுள்ளார்.

சிகண்டி முனிவர் விடுத்த வெற்றிலையானது வேலாகச்சென்று ஜராவசுவுக்கு சாபவிமோசனம் கொடுத்த காரணத்தினால் இவ் ஆலயத்தில் வெற்றிலை வைத்து பக்திரசக்தி வழிபாடு செய்வதுடன் எமுந்தருளிவரும் எம்பெருமானாகிய வேலின் நடுவில் முக்கோணவடிவில் பொட்டுடன் வெற்றிலை வைத்து வீதி வலம் வருவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

உலகில் வேறு எவ்விடத்திலும் இல்லாத தனித்துவமான வழிபாட்டை கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் முகூர்த்தத்தை பக்திரசக்தி முகூர்த்தம் என்றும் வழிபாடு மானசிக மௌன அன்பு வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இத்திருத்தலம் ஞானலய திருத்தலமாக மிளிர்கின்றது .

இன்று செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்த வரலாற்றினை நோக்கின் இன்றைய தோற்றத்திற்கும் ஆரம்பத்திற்கும் காரணகர்த்தாவாக மருதர் கதிர்காமர் என்ற கந்தப்பெருமானது கருணைக்கழல் பற்றிய பூசாரியாருடன் ஆரம்பமாகிய உண்மை தெளிவாகத் தெரிகின்றது.  குருகுலமாகிய வருணகுலத்தில் பரதசாதியில் இடை விடாத தியானவழிபாட்டு மூலம் எம்பெருமானது. பாதாரவிந்தத்தைப் பற்றிய மருதர் கதிர்காமரே இவ்ஆலயத்தில் தோன்றி வழிபாடு செய்த பின் இன்று உள்ள அவர்வழித் தோன்றிய சந்ததியினருக்கு வழிபாடுசெய்ய விட்டுச்சென்றுள்ள தெய்வீகப்பொக்க்கிசமாகும்.

19ம் நூற்றான்டின் முற்பகுதியில் இவ் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த பரதகுலத்தவர்களில் ழூத்தவரும் பக்திமானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ் ஆற்றில் மீன் பிடித்து சீவியம் நடத்தி வந்தார் இவர் மீன் பிடிக்கச்செல்லும்முன்னர் இங்கு சமாதியடைந்த பூவரசமரத்தினை வணங்கியே செல்வது வழக்கம்.

இவர் நாள்தோறும் இவ்வாறு செல்வதன் ழூலம் பக்தி மேம்பாட்டினை பெற்றுக்கொண்டு வரலாயினார் இவ்வாறு இவரது பக்தி வரலாற்றினை கண்ணுற்ற எம்பெருமானார் ஆற்றங்கரையில் தன்னை நாள்தோறும் நினைந்துருகி வணங்கி மீன்பிடிக்கும் கதிர்காமர் முன்னர் மனித உருவில்தோன்றி கதிர்காமா என்னிடம் இக்கரைக்குவா என அழைத்தார்.

selv2

இதன் பொருள் நீ செய்யும் தொழிலை விடுத்து என்பால் என் பாதார விந்தத்தைப் பணிய என்னிடத்தில் வா என்பதாகும் இதனைக்கேட்ட கதிர்காமர் ஆற்றின்மேலிருந்து கரைக்கு வந்தார் இவ்வாறு வந்துசேர்ந்தவரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தினடியினையும் அதன்அருகில் வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்தினையும் காட்டிக்காட்டி நீயே எல்லா வகையிலும் ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார்.

முனிவர் சமாதியடைந்த இடத்தில் குரு பூசை செய்யவும் வேண்டும் என பெருமானார் கேட்டதன்படி கதிர்காமரும் அவர்பின்வரும் சந்ததியினரும் பிதிர்க்கடமை போன்று செய்து வரலானார்கள். இது செய்யாவிட்டால் மிகுந்த தொல்லைகள் ஏற்படும் எனக்கூறினார் இதனால் அன்றுமுதல் இன்றுவரை இதனைக் கடைப்பிடித்து பூசைகள் செய்து வருகின்றனர்.

கதிர்காமர் முதலில் ஆலயம் அமைத்து பூசை செய்தபின் மற்றைய பங்காளரது காணிகள் யாவற்றையும் கொள்விலையாகவேண்டினார் இதற்கு தோம்பு உறுதி என்பன சான்றாக உள்ளன கதிர்காமரும் அவர் மகனான வேலுப்பின்ளை ஜயரும் மற்றும் பிள்ளைகள் எல்லோருமாக இக்கோயிலை முதன்முதலில் காலத்தில் எம்பெருமான் கதிர்காமருடன் உறவாடிய காலம் 1824ம் ஆண்டு.

கோயில் பதிவேடு கதிர்காமரும் வேலுப்பிள்ளை ஜயரும் மற்றும் கதிர்காமரது பிள்ளைகளும் பனையோலையால் வேயப்பட்ட சிறு கொட்டில் அமைத்து அதில் வழிபாட்டுப் பூசை செய்தார்கள். இதன் பின் இவ் ஆலயத்தை எம்பெருமான் கூறியபிரகாரம் கட்டி நிற்குண பிரமமாக வைத்து வழிபடத்தொடங்கினார்.

பெருமான் கூறும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்வதே பெரும்பணி என்றுகூறி கதிர்காமர் பூசை செய்து வந்தார் அதன்பின்னர் தனது வழித்தோன்றல்களான பிள்ளைகளுக்கு இங்கு கைக்கொள்ள ணேடிய நடைமுறைகளையும் பூசைமுறைகளையும் உற்சவ முறைகளையும் உபதேச முறையில் கூறினார்.

இவர்களும் தமது பிள்ளைகளுக்கு கூறி சந்ததி சந்ததியாக உபதேச முறை கூறப்பட்டு வந்தது இதன் பிரகாரமே கர்ண பரம்பரையாக கூறப்பட்ட தொண்டுகளை மற்றைய பரம்பரையினரும் கைக்கொண்டு வருகின்றனர் இவர்கள் இக்கோயிலின் சுற்றாடலிலும் சுற்றி உள்ள ஊர்களிலும் ஆசாரமாக புனிதமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது பூசை முறையானது பக்தி மார்க்கத்தின் உச்ச ஸ்த்தானமாகும் செல்வச் சந்நிதி ஆலயத்தில் அமைர்ந்திருக்கும் ஆற்றங்கரை வேலவனது அருளாட்சிச் சிறப்பை நோக்கினால் செல்வங்கள் பலவற்றை தம்மை நாடி வரும் அடியார்க்கு நல்கி அவர்களது பிறவிப்பிணியை அறுக்கும் திருப்பிரசாதத்தை நாள்தோறும் கொடுத்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.

நாள்தோறும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் வரும் அடியார்க்கு கந்தப்பெருமானது கருணைக்கடாட்சமும் கிடைக்கத் தவறுவதில்லை. செல்வச்சந்நிதிக்குப் போய் செல்வம் எல்லாம் பெறுவீர் என ஓர் சித்தர் கூறினார்.  அரும் செல்வம் பொருட் செல்வம் கல்விச் செல்வம் பிள்ளைச் செல்வம் இவ்வாறு எண்ணிறைந்த செல்வங்களை வேண்டுவார் வேண்டுவதை ஈய்ந்தவண்ணம் இருக்கிறார் இவர் ஒரு அருட்கொடை வள்ளல் இவர் பசிப்பிணி அறுப்பதில் அன்னக்கந்தனாகவும், அன்னதானக்கந்தனாகவும் காட்சி தருகிறார்.

46700 1572517751217 1183736038 31632372 6758230 n

இக்கோயிலைச்சுற்றி ஏறக்குறைய 45 மடங்கள் உள்ளன இவற்றில் அன்பர்கள் தம் நேர்த்தி மூலம் அன்னத்தை தானமாக கொடுக்கின்றனர் தீராத நோய்களை தீர்ப்பதில் கல்லோடைக் கந்தன் பெரும் வைத்தியராக காட்சியளிக்கின்றார். நோயுற்றவர்கள் இங்கு வந்து இவ்வாற்றில் மூழ்கி பிறவிப்பிணியை அவன் கழல் பற்றி கசிந்துருகிக் கேட்க அவர்களது தீராத்துன்பங்களை தீர்த்து வைக்கின்றார்.

வைத்தியர்களால் கைவிட்டு மருந்தால் மாற்றமுடியாத நோயை தன்திருவருளினால் மாற்றியதை கண்ணுற்ற பக்தி சிரோன்மணி வேதநாயகம் பிள்ளை ஆயள் வைத்தியர் எல்லாம் கைவிட்டு மாறாத வருநோய்கள் நினதருளா மரு மருந்தாற் போக்கி ஆனந்தமுறுகின்றன என்பார்..என பாடியுள்ளார்.

தந்தையுமிலை தாயுமிலை சுற்றமுமிலை என்று வரும் அடியார்க்கு தங்கஇடமும் உண்ண உணவும் கொடுக்கிறார் காசியில் இறக்க முத்தி என்பது போல் சந்நிதியில் ஆயுளை நீக்க வரும் அன்பர்கள் அனேகம் இவர்கள் சந்நிதியில் ஆன்மா ஈடேற்றம் பெறுகிறார். என்று கூறுவதும் மிகையாகாது மனச்சாந்தி தேடி அடியார்கள் மனச்சாந்தியையும் அவரது திருவருளையும் பெறுகிறார்கள் .

சந்நிதி முருகனது கருணையாவது காந்தத்தை விட கவரும்சக்தி உடையது .அவரது திருவருள் செல்லாத இடமே கிடையாது .ஜேர்மனில் உள்ள கௌரிபாலாவை பல்லாயிர மைல்களில்; இருந்து அழைத்து அவர் இங்குவந்து தியானமூலம் வழிபாடு செய்கின்றார். இவ்வாறு சந்நிதிக்கந்தனது சச்தியால் கவரப்பட்ட கௌரிபாலா என்ற அடியார் ஆச்சிரமத்திற்கு அருகாமையில் இருப்பதை காணலாம். இத்தகைய சந்நிதி வேலவன் ஒரு கருணைக்கடல் அவரது கருணைக் கடாட்சம் எளிதில் எல்லோர்க்கும் கிடைக்கக்கூடியது.

அவரது அருட் திறனை ஆயிரம் நாவை உடைய ஆதிசேடனாலும் வருணித்து கூறமுடியாது பரந்து கிடக்கும் பார் வெளியில் பரம் சோதியாக பூரணத்துவமாக பொலிந்து விளங்குகிறார் செல்வச்சந்நிதிக் கந்தப்பெருமான். பிதிர் ஞானமார்க்கம் சகலமும் தருவார் சந்நிதி முருகன் அவன் தாள் வணங்கி அவன் அருள் பெறுவோம்.

Related posts