ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,034 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராபர்ட் கோச் நிறுவனம் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,034 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 2,32,082 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 7 பேர் பலியான நிலையில், இதுவரை ஜெர்மனியில் கொரோனாவுக்கு 9,267 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 10 நாட்களாகவே ஜெர்மனியில் 2,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 50 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விடங்களில் ஊரடங்கையும் ஜெர்மனி அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related posts