த.தே.கூ இல் சுமந்திரனின் பதவி பறிபோகுமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று (22) கூடவுள்ளது. இதன்போது, கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் யார் என்ற விவகாரம் ஆராயப்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரை மாற்ற வேண்டுமென கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மூன்றும் இம்முறை கூட்டாக கைகோர்த்துள்ளன. கடந்த நாடாளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் அந்த பொறுப்பை வகித்தார். அதற்கு முதல் முறை சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த பொறுப்பை வகித்தார்.

இம்முறை பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் இரண்டில் ஒன்றிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவை கோரியுள்ளன. குறிப்பாக, பேச்சாளர் பொறுப்பை ஏற்பதில் புளொட் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதனால் அனேகமாக ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் அந்த பொறுப்பை ஏற்கலாம்.

ஆனால், இரா.சம்பந்தன் இலகுவில் அதற்கு சம்மதிக்க வாய்ப்பில்லை. இயன்றவரை எம்.ஏ.சுமந்தினை பாதுகாக்கவே முனைவார் என கருதப்படுகிறது.

இதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்த போதும், அது நடக்கவில்லை. நேற்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறும் என சில தினங்களின் முன்னரே ஊடகங்களில் செய்தி வெளியாகி விட்டது. ஆனால் கூட்டமைப்பு எம்.பிக்களில் பலருக்கு நேற்று வரை கூட்டம் நடக்குமென்ற விடயமே தெரியாது. அப்படி இருக்கிறது ஏற்பாடு!

Related posts