குழந்தைகள் துரித உணவுகளை விரும்புவது ஏன்?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உணவுகளை அளிக்கின்றனரோ, அதையே குழந்தைகள் பழக்கப்படுத்திக்கொள்வதாகவும், பெற்றோர்களைப் பொறுத்து குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறுபடுவதாகவும் ஓரிகான் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் இயற்கையாகவே உணவில் சர்க்கரை மற்றும் உப்பு போன்றவற்றை விரும்புகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் உணவு விருப்பங்கள் வேறுபடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜர்னல் ஆஃப் பப்ளிக் பாலிசி & மார்க்கெட்டிங் இதழில் வெளியிடப்படவுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் முன்னதாக ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

கலோரி அதிகமுள்ள மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், குழந்தைகளின் உடல் எடைக்கு முக்கிய காரணியாக அமைகின்றன. இதனால், குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிப்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளதாக முதன்மை ஆய்வாளர் டி. பெட்டினா கார்ன்வெல் கூறுகிறார்.

பெற்றோர் உணவில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்வதுடன் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது  இளம்வயதிலேயே குழந்தைகள் அந்த சுவைக்கு பழக்கமாகின்றனர். இதனால் பிற்காலத்தில் சத்தான உணவுகளை அவர்கள் விருப்பமாக தேர்வு செய்வதில்லை.

உதாரணமாக சிறுவயதில் காய்கறிகள் சாப்பிட்டு பழக்கப்படாத குழந்தைகள் பின்னாளில் அதனைச் சாப்பிட மறுக்கின்றனர் என்றார். எனவே, குழந்தைகளுக்கு முதல் மூன்று வருடங்கள் சத்தான உணவுகளை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

இதுகுறித்த ஆய்வில், 81 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில், முதல் மூன்று வருடங்கள் காய்கறி உள்ளிட்ட சத்தான உணவுகளை உட்கொண்ட குழந்தைகள், பள்ளிகளில் மதிய உணவு நேரத்தில் தாங்களாகவே காய்கறிகளை உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்ட குழந்தைகள் பிற்காலத்தில் காய்கறிகளை சாப்பிடுவது குறைவாக இருப்பது தெரியவந்தது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்துவதே அதற்கு காரணம்.

இதனால் குழந்தைகள் சாப்பிடும் உணவினைத் தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள், தாங்கள் உணவில் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கும்பட்சத்தில் அது குழந்தைகளிடம் பிரதிபலித்து அவர்களின் உணவுப்பழக்க முறைகளை மேம்படுத்தும் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Related posts