வீட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் கொரோனா வேகமாகப் பரவுகிறது!

உலகளவில் கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடும் காரணமாகக் கூறப்படுகிறது.  உலகில் ஐந்து பேரில் இருவருக்கு தங்களது வீடுகளில் தண்ணீர் விநியோகம் இல்லை.

இந்தக் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான வழிகளில் அடிக்கடி கைகளைக் கழுவதும் ஒன்று. ஆனால் உலகில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பேருக்கு வீட்டில்  தண்ணீரும் சோப்பும் இல்லை. நான்கு பில்லியன் பேர் ஆண்டுக்கு ஒரு மாதம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ‘இயூஎன்-வாட்டர்’ (UN-Water) பிரிவின் தலைவர் கில்பர்ட் ஹவுங்போ  தெரிவித்தார். “பல்லாண்டுகளாக தண்ணீர் விநியோகத்திற்காக முதலீடு செய்யப்படவில்லை. அதனால் வளர்ச்சியடையும் நாடுகளில் இந்தப் பிரச்சினை கடுமையாகியுள்ளது. இதன் விளைவு நீண்டகாலம் வரை செல்லும். கிருமித்தொற்றுகள் சுழற்சி மீண்டும் மீண்டும் ஏற்படலாம்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்காக சில நிறுவனங்கள் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளன. ஜப்பானின் லிக்சில் குழுமம், யூனிசெஃப் அமைப்புடன் இணைந்து மிகக் குறைவான தண்ணீர் தேவைப்படக்கூடிய கைக்கழுவும் கருவியை உருவாக்கியுள்ளது. ‘சாட்டோ டேப்’ என்ற அந்தக் கருவி, தண்ணீரைச் சேமிக்கும் வடிவமைப்பைக் கொண்டது. ஒரே ஒரு பிளாஸ்டிக் போத்தல் அளவு தண்ணீர் மட்டும் இதற்கு தேவைப்படலாம்.

இதுபோன்ற கருவிகள் அவசரகால தேவைக்குப் பயன்படலாம். ஆயினும், இந்தப் பிரச்சினைக்கான நிரந்தர  தீர்வுக்கு நீர்க்குழாய் வசதிகள் இன்னும் பரவலாக அமைக்கப்படவேண்டும்.

Related posts