சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட பகுதியாக சீனாவின் வூஹான் மாகாணம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட வைரஸ் பாதிப்பு அங்குள்ள மற்ற நகரங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சீன அரசு மேற்கொண்ட துரித நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வூஹானில் பாதிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளில் கிட்டத்தட்ட 68,138 பாதிப்புகள் வூஹானில் பதிவானவை. மேலும் கொரோனாவல் இம்மாகாணத்தில் மட்டும் 4,512 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் குழு நோயால் குணமடைந்தவர்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. இதில் கொரோனாவால் குணமடைந்த 100 பேரின் அன்றாட நடவடிக்கைகளை இந்த குழு ஆய்வு செய்து வந்துள்ளது. இதில் நடந்து கடக்க வேண்டிய 500 மீட்டர் தொலைவை சராசரியாக 5 நிமிடங்களில் கடக்க முடியும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களால் 6 நிமிடங்களில் 400 மீட்டர்கள் மட்டுமே கடக்க முடிந்தது தெரியவந்துள்ளது.
மேலும் சில குணமடைந்த நோயாளிகள் வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கழித்தும் இன்னும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் உதவியுடன் மூச்சு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குணமடைந்த 100 நோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் முழுமையாக குணமடையவில்லை என்பதும் நோயாளிகள் மனச்சோர்வு மற்றும் களக்கம் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.