9 ஆவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நாளை!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 3652 அரசியல் கட்சிகளும் 3800 சுயாதீன குழுக்களும் போட்டியிடவுள்ளன. கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் , வன்னி , மட்டக்களப்பு , திகாமடுல்லை , திருகோணமலை , குருணாகல் , புத்தளம் , அநுராதபுரம் , பொலன்னறுவை , பதுளை , மொனராகலை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக 7 , 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும். கடந்த அனைத்து தேர்தல்களிலும் காலை 7 மணி முதல் மாலை 4 வரை மாத்திரமே வாக்களிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது முன்னரைப் போன்றல்லாமல் கொரோனா அச்சம் காரணமாக சமூக பாதுகாப்புடனும் விளிப்புணர்வுடனும் புதியதொரு வழமையான சூழலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Related posts