தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம்!

தட்ஷண கைலாயமென திருமூலரால் புகழ்ந்து பாடப் பெற்றதும், வங்கக் கடலை கிழக்கிலும்,செழிப்பு மிக்க குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற பெருநிலங்களை மூன்று புறங்களிலும் கொண்டுள்ளதுமான உகந்தை உகந்தைமலை ஸ்ரீமுருகன் தேவஸ்தான வருடாந்த ஆடிவேல் மகோற்சவ திருவிழா கடந்த மாதம் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று 04ம் திகதி மு.ப .08 மணிக்கு சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.இன்று மாலை கொடியிறக்கம், திருக்கல்யாணம் திருப்பொன்னூஞ்சல் நடைபெறுகின்றன.

திருப்படைக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் உகந்தை முருகன் ஆலயம் பாணமை கிராமத்தில் இருந்து 30கிலோ மீற்றர் தூரத்தில் வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த புராதன ஆலயத்திற்கு 1000 ஏக்கர் நிலம் அக்காலத்தில் சொந்தமாக இருந்ததாகவும் தற்போது வடக்கே உகந்தை மலைக் காட்டையும், கிழக்கே வங்கக்கடலையும், தெற்கே குமண சரணாலயத்தையும், மேற்கே பிரதான வீதியையும் உள்ளடக்கிய 30 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாகவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கையின் பூர்வீக வரலாறு கந்தன் படையெடுப்பு காலத்தில் ஆரம்பமாகி இராமாயண காலத்துடன் தொடர்வதாக ஐதீகம் நிலவுகின்றது. கந்தன் படையெடுப்பின் போது சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான் ஏவிய வேல், சூரன் மலையை அழித்த பின்னர் வாகுர மலையைப் பிளந்து கடலில் வீழ்ந்து மூன்று வேலுருக் கொண்ட கதிர்களை வீசியதாகவும், அவை மூன்றும் நாகர்முனை ,மண்டூர், உகந்தை, ஆகிய இடங்களில் வீழ்ததாகவும் ஐதீகம்.

இதன்படி இலங்கையின் முதல் வரலாற்று நிகழ்வுடன் தொடர்புள்ள இடங்களில் ஒன்றாக உகந்தை விளங்குகின்றது. இதன் பின்னர் புண்ணிய பூமியாகக் கருதப்பட்ட உகந்தைமலையில் ஆதிநாகர் இன மக்களால் முருகன் ஆலயம் எழுப்பப்பட்டு வழிபடப்பட்டது.

இலங்கையில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வான இராமாயணப் போர் கி.மு.5000 ஆண்டளவில் நிகழ்ந்தது எனக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் இலங்காபுரியை தல​ைநகராகக் கொண்டு இலங்கயை இராவனன் ஆட்சி செய்தான் என வால்மீகி இராமாயணம் கூறுகின்றது.

இராவணன் இராமாயணப் போரில் உயிர் துறந்த பின் இலங்கையில் ஏற்பட்ட கடல்கோளினால் இலங்காபுரி நகர் அழிந்தது. இதற்கு சான்றாக உகந்தையின் தெற்கு கடற்பரப்பில் இன்றும் கானப்படும் மலைக்குன்றுகள் இராவணன் கோட்டை என அழைக்கப்படுகின்றன.

கடல்கோளைத் தொடந்து வடஇந்தியாவின் அஸ்தினாபுரத்தில் இருந்து குருகுல நாகர் எனும் வம்சத்தினர் இங்கு வந்தனர். இவர்கள் இலங்கையில் இருந்த இயக்கர்களோடு இணைந்து உகந்தையைத் தலைநகராக்கி ஆட்சி புரிந்தாகவும், இதன்படி இலங்கையின் இரண்டாவது தலைநகர் உகந்தையாக விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆதிவேடர்களால் உகந்தைமலையில் வேல் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இராவணன் ஆட்சிக் காலத்தில் இந்து ஓர் சிவாலயம் அமைக்கப்பட்டதாகவும் பின்னர் தனசிங்கன் என்பவனால் இந்த ஆலயம் அழிக்கப்பட்டதாகவும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ கூறுகின்றது. இதன் பின்னர் மீண்டும் உகந்தை மலையில் முருக வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கியது.

பாணமை_கூமுனை வீதியில் இருந்து உகந்தை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் இரு மருங்கிலும் காணப்படும் உயரமான மலைப் பாறைகள் ஆலயத்திற்கு இயற்கையான வாயிலாக அமைந்துள்ளன. இவ்வாயிலைக் கடந்து சென்று வலதுபுறத்தில் திரும்பி சிறிது தூரம் சென்றதும் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் இரு மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் முதலாவது மலை வள்ளி மலை எனவும் அடுத்தது பிள்ளையார் மலை எனவும் அழைக்கப்படுகின்றது. ஆலயத்தில் இருந்து கடற்கரைப் பக்கமாக மேலும் மூன்று மலைப் பாறைகள் அமைந்துள்ளன. இவை மஞ்சள் கிரிமலை , தோணிமலை , தோணிதாண்டா மலை என அழைக்கப்படுகின்றன.

சூரசங்காரத்தின் பின்பு முருகப் பெருமான் தனது படை வீடுகளில் ஒன்றான உகந்தை மலையில் களைப்பாறி சில காலம் தங்கி இருந்தார் என்றும் போருக்கு பின்னரும் முருகன் உகந்து வந்து இருந்தபடியால் உகந்தை மலை என பெயர் பெற்றதென்பதும் ஐதீகம்.

– ஆர்.நடராஜன்

Related posts