களுவங்கேணியில் இரு தரப்பினரிடையே கைகலப்பு!

மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவின் களுவங்கேணி பகுதியில் கோவில் வளாகத்தில் இரு தரப்பினரிடையே நேற்றிரவு கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது அரசியலுடன் தொடர்புடைய பிரச்சினை அல்லவெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், களுவங்கேணி பகுதியிலுள்ள தமது காரியாலயத்திலிருந்த பதாகைகள் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமது ஆதரவாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காயமடைந்த இருவரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஏறாவூர் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது, போத்தலில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு எரியூட்டப்பட்டு வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரது வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts