முதலாவது லங்கன் பிரீமியர் லீக் ஓகஸ்ட் 28இல் ஆரம்பம்!

இலங்கையில் முதல் தடவை இடம்பெறவுள்ள, லங்கன் பிரீமியர் லீக் ரி20 போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 28 முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரங்கில் முதன்மையான கிரிக்கெட் போட்டியாக லங்கன் பிரீமியர் லீக் ரி20 கிரிக்கெட் தொடரை அடுத்த மாதம் நடாத்துவதற்கு, இன்று (27) இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கன் பிரீமியர் லீக் போட்டிகள் ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 20 வரை, இலங்கையிலுள்ள 4 சர்வதேச மைதானங்களில் இடம்பெறவுள்ளன.

23 போட்டிகள் கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஆர். பிரேமதாஸ, ரங்கிரி தம்புள்ளை, கண்டி பல்லேகலை, அம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானங்களில் இடம்பெறவுள்ள இந்த போட்டித் தொடரில் 5 அணிகள் பங்கேற்கவுள்ளன.

கொழும்பு, கண்டி, தம்புள்ளை, காலி, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அவ்வணிகளின் பெயர்கள் அமையவுள்ளன.

இப்போட்டித் தொடரில் பங்கேற்க, 70இற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் மற்றும் 10 இற்கும் மேற்பட்ட முன்னணி சர்வதேச பயிற்சியாளர்கள் முன்வந்துள்ளனர். அவர்களுடன் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வீரர்களும் இணைவார்கள்.

போட்டிகளுக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்திற்கான செயற்பாடுகள் ஜூலை 30 ஆம் திகதியுடன் நிறைவடைவதோடு, அதனைத் தொடர்ந்து அட்டவணை வெளியிடப்படவுள்ளது.

Related posts