தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கான நடமாடும் வாக்குச்சாவடி இரத்து!

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, தனியாக ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்த நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் முன்னெடுக்கப்படாது என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு ஜூலை 31ஆம் திகதியன்று, நடமாடும் வாக்குச்சாவடிகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆயினும் இதில் ஒரு சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதனால் அதனை முன்னெடுக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நேற்று (27) இடம்பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரின் உரிமை தொடர்பில் எழுந்த கேள்வியை அடுத்து இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வாக்காளர்கள் உத்தியோகபூர்வ வாக்குச் சாவடிகளிலேயே வாக்களிக்க வேண்டும் என, தேர்தல் சட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பின் மூலம், கொவிட்-19 தொற்றாளர்களின் உரிமை மீறப்படுவதால், ஆணைக்குழு இதனை ஆழமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, ஏற்கனவே 4.00 மணியிலிருந்து 5.00 மணியாக ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கப்பட்ட வாக்களிப்பு நேரம் மேலும் 30 நிமிடங்கள் நீடித்து, தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த வாக்காளர்கள், சுகாதார அமைச்சினால் முற்கூட்டிய அனுமதியை பெற்று, அவர்களுக்குரிய வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியும் எனவும், இதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், எவரொருவரும் வாக்குச் சாவடிக்கு வந்து தமது வாக்கை அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயங்கள் தொடர்பில், கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts