வடமாகாணத்தில் உள்ள சிறுவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களா!

வடமாகாணத்தில் அனைத்து சிறுவர்களும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களா என்பது தொடர்பான ஆய்வறிக்கையைக் கோரியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சீர்திருத்த பாடசாலையில் உள்ளவர்களை விரைவில் சமுகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அச்சுவேலியிலுள்ள சான்றுபெற்ற சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையின் புதிய பாடசாலைக் கட்டத்தொகுதியை வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று (23) திறந்து வைத்தார்.

அந்நிகழ்வில் வடமாகாணப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர், கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த நீதிமன்றங்களால் சீர்திருத்ததிற்காக அனுப்பப்பட்ட 38 சிறுவர்கள் இங்கிருக்கின்றனர். இந்த சிறுவர்கள் ஏன் தங்களுடைய வாழ்நிலையிலே இருந்து தவறிய வழியில் சென்றுள்ளனர் என்ற கேள்வியைக் நாம் கேட்க வேண்டியுள்ளது. உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி குழந்தைகள் 13 வயது முதல் 19 வயது வரையுள்ள காலகட்டத்தில் அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது.

அவர்களின் பதின்பருவத்தில் ஏற்படும் உடல் மற்றும் உள்ளம்; சார்ந்த மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் சூழ்நிலைகளும் வழிகாட்டல்களும் சரியான முறையில் இருக்கின்றபோது அவர்கள் சரியான பாதையில் கொண்டு செல்லப்படுகின்றார்கள். இந்தக் காலகட்டம் அவர்களுக்கு ஒரு புரட்சிகரமான காலகட்டம். அக்காலகட்டத்தில் செய்கின்ற சிறு விடயங்கள் கூட அவர்களின் இயல்பான வாழ்விற்கு மாற்றமானதாகவிருக்கும்.

அவற்றைக் குற்றமென்று சொல்வதைவிட தவறுகள் என்றுதான் சொல்ல வேண்டும். அச்செயல்கள் புரட்சிகரமானதாகவிருக்கும். அவற்றை சரியானமுறையில் நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பு அவர்கள் வாழும் குடும்பங்கள், பாடசாலைகள், சூழல்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றுக்கே உள்ளது. அவ்வாறு சரியாக நெறிப்படுத்தப்படாததால் இவர்கள் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டு சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு சீர்திருத்தப்படும் இடங்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள்.

சீர்திருத்தத்திற்காக அனுப்பபட்டுள்ள இவர்கள் குற்றவாளிகளல்ல அவர்களை இந்நிலைக்குத் தள்ளிய குடும்பமும் சூழலும் சமுதாயமும்தான் குற்றவாளிகள். கனவுகளோடும் உற்சாகத்தோடும் வாழவேண்டிய இளமைக்காலத்தை இவர்கள் இங்கு களிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நினைக்கும்போது என் இதயம் கனக்கின்றது. இவர்கள் குற்றவாளிகளல்ல தவறிழைத்தவர்கள். அவர்களை வழிநடத்த வேண்டியது எமது கடமை. இந்ந 38 சிறுவர்களும் எந்த சூழிநிலைகளிலே தவறிழைத்தார்கள் அவற்றிற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அவர்களின் மனநிலையை மாற்றி மீண்டும் அவர்களை இந்த சமூகத்தோடு இணைக்கவேண்டும்.
அதற்கான அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டுமென நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளரைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related posts