விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள்!

வீடியோ கேம்கள் குழந்தைகளிடையே பல வருடங்களாகப் பிரபலமாக இருந்து வந்தாலும் செல்போன் வந்த பிறகு வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் விளையாடி வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக விளையாடத் தொடங்கிய இந்த வீடியோ கேம்கள் இன்று ஒரு போதைப் பொருள் போல பலரை அடிமையாக்கி விட்டது.

ஒருவரை அடிமையாக்கும் வகையிலேயே இந்த வீடியோ கேம்களின் வடிவமைப்பு இருக்கின்றது. ஒரு கேமிற்குள் பல நிலைகள், ஒவ்வொரு நிலைக்கும் சில பரிசுகள், கண்ணைக் கவரும் அனிமேஷன்கள், தினமும் விளையாடுவோருக்கு சிறப்புப் பரிசுகள் எனப் பல வலைகளை விரித்து அனைத்து வயதினரையும் இவை ஈர்க்கின்றன. சிலர் தங்கள் தனிமையை விரட்டவும் இம்மாதிரியான விளையாட்டில் ஈடுபடுவது உண்டு.

சில கேம்கள் சாகசங்கள் நிறைந்ததாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை தனியாகவும் பல குழுக்களாகவும் இணையதளத்தில் இணைந்து விளையாடுகின்றனர். சிலருக்கெல்லாம் இவற்றை விளையாடாமல் தூக்கமே வருவதில்லை. கனவிலும் கூட இந்த கேம்கள் வருவதாக என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது நிச்சயம் மனநலச் சிக்கல்களை உருவாக்கும்.

Related posts