கொரோனா தனிமையும் போதைப்பாவனையும்!

மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும், கஞ்சா புகைப்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது மிக அதிகம். மதுபழக்கத்தைவிட கஞ்சா பழக்கம் சமூகத்தில் மிக மோசமான விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களுமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மது, கஞ்சா பயன்படுத்துவோர் அந்த போதை வஸ்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

ஒருவரிடம் கஞ்சா பழக்கம் இருந்தால், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அதை கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்..

கஞ்சா போதையில் இருக்கும்போது, கருவிழிகள் இயல்பைவிட பெரிதாகத் தோன்றும். கண் வெள்ளை பகுதிகள் சிவந்து காணப்படும். கை கால்கள், கண் இமைகள் நடுங்கும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். உறக்க சோர்வு இருந்துகொண்டே இருக்கும். தொண்டை வறட்சியால் அடிக்கடி தண்ணீர் பருகுவா்.

உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால், நீங்கள் இரண்டரை அடி தள்ளி நின்றுகொண்டு உங்கள் கை சுட்டுவிரலை நீட்டி, இடது புறமாகவும் வலதுபுறமாகவும் அசைத்து அதை பார்க்கும்படி கூறுங்கள். அவர்களால் முடியாது. கஞ்சா புகைத்த இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை இந்த அறிகுறி தென்படும்.

வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தாலும், போதைக்கு அடிமையானவர்கள் எப்படியாவது கஞ்சாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். கஞ்சா வீட்டில் இருந்தால் அது தக்காளி அல்லது தேயிலை வாசனையை உருவாக்கும். மூலிகை வாசனையையும் தரும். பயன்படுத்துபவர்உடை, தலைமுடியிலும் அந்த வாசனை வீசும். அவர்களது கைபெருவிரல், சுட்டு விரலில் கஞ்சாவை கசக்கியதால் ஏற்பட்ட தழும்புகள் காணப்படும்.

கஞ்சா புகைப்பவர்களின் குணாதிசயங்களில் ஏற்படும் மாற்றங்கள்..

வீட்டின் உள்ளே அவர்களால் முடங்கி இருக்க முடியாது. வெளியே செல்ல துடிப்பார்கள். ஒரு பொட்டலம் கஞ்சாவின் விலை ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்பதால், அவர்களுக்கு பணத்தேவை இருந்துகொண்டே இருக்கும். எனவே பணத்திற்காக குடும்ப உறுப்பினர்களை நச்சரிப்பார்கள்.

பழைய நண்பர்களிடம் இருந்து விலகி, புதிய நண்பர்களோடு காட்சியளிப்பார்கள். மிகவும் பிடித்த விளையாட்டு, பொழுதுபோக்குகளை தவிர்ப்பர். வீட்டில் உள்ளவர்களை முகத்திற்கு முகம் பார்க்க தயங்குவார்கள். சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்கு சிரிப்பார்கள்.

மாணவர்களாக இருந்தால் திடீரென்று படிப்பில் பின்னடைவை சந்திப்பர். நேர்த்தியாக உடை அணிந்தவர்கள், கஞ்சா புகைக்க தொடங்கிய பின்பு, கண்ட கண்ட இடங்களில் உட்காருவது, படுத்துக்கொள்வது போன்ற பழக்க வழக்கங்கள் உருவாகிவிடும்.

பசி அதிகரிக்கும். தீப்பிடித்த இடத்தில் தண்ணீர் ஊற்றுவதுபோல, குளிர்பானங்களை பருகுவர். வீட்டில் இருக்கும்போது, கஞ்சாவை புகைத்தால் தெரிந்துவிடும். எனவே அதிக அளவில் சாக்லெட்டுகள் வாங்கி, அதில் கஞ்சாவை கலந்து உட்கொள்வார்கள்.

இதுபோன்றவர்கள் நல்லபிள்ளையாக தனி அறையில் புகுந்து தாழிட்டு, உள்ளே உட்கார்ந்திருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். இரவு நேரங்களிலும் தூங்காமல் விழித்திருப்பது, அடைந்து கிடக்கும் அறையில் அவ்வப்போது ‘ரூம் பிரஷ்னர்’ பயன்படுத்துவது, ஊதுவத்தி கொளுத்தி வைப்பது போன்ற செயல்களும் கவனிக்க வேண்டியவை. கஞ்சா புகை நாற்றம் வெளியே வராமல் இருக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.

கஞ்சா புகைக்கும் யாரும், அதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். தன்னை சந்தேகப்படுவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவர். இவர்களை சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத் தினால் உண்மை தெரிந்துவிடும். அடிக்கடி புகைப்பவர்கள் என்றால், கஞ்சா புகைத்து ஒரு மாதம் ஆகியிருந்தாலும் பரிசோதனை முடிவில் உண்மை தெரிந்துவிடும். எப்போதாவது புகைப்பவர் என்றால், மூன்று நாட்களுக்கு முன்பு புகைத்திருந்தாலும் பரிசோதனையில் கண்டுபிடித்து விடலாம்.

கஞ்சா புகைப்பவர்களை கண்டறிந்தால், அவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம். அதற்கான மையங்களை தொடர்புகொள்ளவேண்டும்.

Related posts