மேல் மாகாணத்தில் 25 பாதாளக் குழுக்கள் !

மேல் மாகாணத்தில் 25 பாதாளக் குழுக்கள் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த மேல்மாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் , அவற்றுள்  20 குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்டறிந்துள்ளதாகவும் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களை தடுப்படற்காக நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய மேல் மாகாணத்தில் இவ்வாறான திட்டமிட்ட குற்றச் செயல்களில் 25 பாதாள குழுக்கல் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் , இவற்றில் 20 குழுக்கள் தொடர்பில் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பாதாளக்குழுக்களில் இணைந்து செயற்படும் 388 சந்தேக நபர்கள் தொடர்பில் தகல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன்,அவர்களுள் சிலர் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன் , இன்னும் சிலர் வெளிநாடுகளிலும் , பிணையிலும் சென்றுள்ளனர். இவர்களாலே இந்த திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் இந்த பாதாளகுழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய மேல்மாகாணத்திலிருக்கும் 53 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட பாதாளகுழு உறுப்பினர்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராண்ந்து அவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் இருக்கும் பாதாளகுழு உறுப்பினர்கள் தங்களது திட்டங்களை மேற்கொள்வதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு தொலைபேசி , போதைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொடுக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் , அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பாதாள குழுவைச் சேர்ந்த 26 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை சப்புகஸ்கந்த பகுதியில் போதைப் பொருள் கடத்திலினால் கிடைக்கப் பெற்ற பணத்தை கணக்கிடுவதற்காக கடத்தல் காரர்கள் வீடிடான்றை குத்தகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதுடன். அந்த கடத்தலில் ஈடுபட்ட நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலே பெருந்தொகையான பணம் கணக்கிடப்பட்டுள்ளதுடன் , குறித்த விட்டிலிருந்து தனியார் வங்கிகளில் பணத்தை கணக்கிடுவதற்காக பயன்படுத்தும் இலத்திரனியல் உபகரணங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சமிந்த என்ற நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தனியார் வங்கிக்கு சொந்தமான காசோலை புத்தகத்தின் ஊடாக இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் , இதன்போது கோடிக்கணக்காண பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலகனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கடத்தல் காரர்களுக்கு சொந்தமான 21 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும் இவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பரிலும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை அரசுடமையாக்கவோ அல்லது தடைச் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts