லா லிகா கால்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற அணி!

லா லிகா கால்பந்தாட்டத் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ரியல் மெட்ரிட் அணி 34 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

20 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய 19 ணிகளையும் தலா இரு முறை எதிர்த்தாடும். அந்தவகையில், நேற்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், ரியல் மெட்ரிட் அணி 36 போட்டிகளில் 83 புள்ளிகளைப் பிடித்து முதலிடத்தில் இருந்தது. எனினும் எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட முதலிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை உறுதி செய்யும் நிலையில் இருந்தது ரியல் மெட்ரிட் அணி.

மறுமுனையில், பார்ஸிலோனா அணி 36 போட்டிகளில் 79 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலிருந்தது. எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வகிக்க முடியும் என்ற கட்டாயத்தில் ஒசாசுனா அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் பார்ஸிலோனா களமிறங்கியது.

ரியல் மெட்ரிட் அணி, வில்லாரியல் அணியையும்,  பார்ஸிலோனா அணி ஒசாசுனா அணியையும் நேற்றைய தினம் எதிர்த்தாடின. இதில், கரிம் பென்சிமாவினால் அடிக்கப்பட்ட 2 கோல்களின்  உதவியால் ரியல் மெட்ரிட் அணி 2-1 என வில்லாரியல் அணியை வீழ்த்தியது. இதேவேளை, பார்சிலோனா அணி தனது சொந்த மைதானத்தில் ஒசாசுனா அணியிடம் 1-2 என்ற கோல்கள் கணக்கில் அதிர்சித் தோல்வியைத் தழுவ சம்பியன் கனவு கலைந்தது.

புள்ளிகள் பட்டியலில் ரியல் மெட்ரிட் அணி 26 வெற்றிகள், 8 சமநிலைகளுடன் 86 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும், பார்ஸிலோனா அணி 24 வெற்றிள், 7 சமநிலைகளுடன் 79 புள்ளிகளைப் பெற்று  இரண்டாவது இடத்திலும், அடலெட்டிகோ மெட்ரிட் அணி 18 வெற்றிகள், 15 சமநிலைகளுடன் 69 புள்ளிகளுடன்  மூன்றாவது இடத்திலும், செவிவ்லா அணி 18 வெற்றிகள், 13 சமநிலைகளுடன் நான்காவது இடத்தில் உள்ளன.

கடந்த 2017 க்குப் பின்னர்  தற்போதுதான் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், லா லிகா கால்பந்தாட்ட வரலாற்றில் 34 ஆவது தடவையாக ரியல் மெட்ரிட் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts