சமூக வலைத் தளங்கள் இன்றைய சமுகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கம்!

 

இன்று சமூக வலைத்தளங்கள் மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. உலகில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஒருவர் மற்றவரை  தெரியாமல் வாழலாம். ஆனால் சமூக வலைத்தளங்கள் முழு உலகத்தையே தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது.
இதனால் மக்களும் அதற்கு அடிமையாகி வாழ்கின்றனர்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று ஒருநாள் உலகம் முழுவதிலும் மின்தடை போல் இணையத்தை நிலவினால் எவ்வாறு இருக்கும்? அப்போது மனிதர்களின் செயற்பாடு எவ்வாறு இருக்கும்?  என்பதை கற்பனை செய்தால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் இக்கற்பனை சமூகத்தில் நம் மனக்கண் முன் வரும்  கதாபாத்திரங்கள் அனைத்தும் கோபம் மற்றும் எரிச்சலுடன் கையில் smart phone,lab top வைத்துக் கொண்டு ஓரிடத்தில் நில்லாது பித்துப் பிடித்தவர்களாக இருப்பார்கள் . மாறாக ஒருவரது கற்பனையிலும் புல்வெளியில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் பாத்திரங்கள் இடம் பெறுவதில்லை.
உலக அளவில் சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும்,இளைஞர்களும்.  சமூக வலைத்தளங்களை இவ்வளவு பேர் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் அது மிக சுதந்திரமாக இருப்பதும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதும் ஆகும்.    உலகமயமாக்கலால் தனித் தனி மனிதர்களாக சுருங்கி போய்விட்ட சமூகத்தை சமூகவலைத்தளங்கள்     ஒன்றிணைக்கின்றன.

இவ் வலைத்தளங்கள் உருவாக்கப்பட்ட மைக்கான உண்மையான காரணம் நபர்களுக்கிடையே சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்துவதும்,வியாபார முன்னேற்றமும் ஆகும். இவ்வாறான தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை இன்று மனிதர்களின் மூளையை ஆட்சி செய்து அவர்களது பொழுதுபோக்கு தேவையாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த வலைத்தளங்களில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ அதே அளவிற்கு பயன்படாத விடயங்களும் உள்ளன. இன்று நாம் இருப்பது இந்தக் கையடக்க உலகத்திற்குள் தான். “உலகமே உள்ளங்கையில் அடங்கி விட்டது” என பெருமிதம் கொள்ளும் மனிதர்கள் தாங்கள் தான் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகியுள்ளோம் என்பதை இன்னும் உணரவில்லை.

சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது இன்று ஒவ்வொருவரினதும் அத்தியாவசிய தேவையாக மாற்றம் பெற்றுள்ளது . நாளொன்றுக்கு ஒருவர் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தை Face book,Whats’up,Viber,IMO,Skype,Line, Instagram,Twitter,Google,Messenger  போன்ற பல வடிவிலான சமூக வலைதளங்கள் உடன் செலவிடுகின்றார்கள். இவ்வாறு அடிமையாகி உள்ளவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிப்பது போல் இவை நாளுக்கு நாள் பல புதிய வசதிகளுடன் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இன்று பல குடும்பங்களில் உடைக்கும், உறவுகளின் முறிவுக்கும் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படவும் முதற் காரணியாக சமூகவலைத்தளப் பவனை அமைகின்றது.  இன்று உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் விடயங்களை அறிந்த ஒருவருக்கு குடும்ப நடப்புகளும் , தன் அயலவர்கள் பற்றியும் தெரிவதில்லை. கணவன்-மனைவி இருவருமே தமது பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால் அவர்களுக்குள்ளே புரிந்துணர்வை பெறவோ, கருத்துப்பரிமாற்றம் அன்பான உரையாடல் போன்றவற்றிற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் இப் பெற்றோர்களுக்கு தமது மழலைகளின் மொழி கேட்கவோ அல்லது பிஞ்சுகளின் விரல் பற்றி விளையாடவோ ஆர்வம் எழாது. தம் பெற்றோர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளும் சிறுவயது முதலே இவ்வலைதளத்தை மீது ஆர்வம் கொள்கின்றார்கள்.

அத்துடன் சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு என நேரம் ஒதுக்காது அவர்களின் பொழுதுபோக்கிற்காக இவ்வாறான சமூக வலைத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிப்பதோடு அவர்களது முழு வாழ்வையும் சீரழித்து விடுகிறது. தற்போது வலைத்தளங்கள் ஒவ்வொருவருக்கும் அதிகமான நண்பர்களையும் அதிகளவு அறிவையும் ஏற்படுத்துகின்றது.ஆனால் உண்மையான நண்பன்,சுதந்திரம் , ரசனை , மன அமைதி போன்ற பலவற்றை நம்மிடமிருந்து பறித்துக் கொள்கிறது.

தற்போது வலைத்தளங்களில் காலம் கழிப்பவர்கள் குறைவான மனிதநேயம் , மன அழுத்தம், சோர்வு, ஞாபகமறதி, சுயநலம் போன்ற குணங்கள் காணப்படுவதோடு கண் சார்ந்த நோய்கள் ,உயர் இரத்த அழுத்தம்,  இதய நரம்பு பாதிப்புகள் போன்றனவும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்களில்  சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அவர்களது கல்வி, சக மாணவர்களுடனான நட்பு, பெற்றோர்களுடனான பிணைப்பு என அனைத்தையும் அழித்து விடுகிறது. இன்றைய சிறுவர்கள், இளைஞர்களில் பலர் சமூக வலைத்தள பாவனையால் பெற்றோரை கொலை செய்யும் அளவிற்கு மூர்க்கமாக மாறி வருவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. போதையை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதே புரிவதில்லை இவர்களால் சிறு பொழுது கூட இவற்றை விட்டு பிரிந்து இருப்பது என்பது இயலாத விடயமாகும். இன்றைய தலைமுறையினர் இது தொடர்பாக விளிப்படைதல் வேண்டும்.

எனவே அனைத்து விடயங்களிலும் சாதக மற்றும் பாதக விளைவுகள் ஏற்படுவது சகஜம் ஆகும். அதில் சமூக வலைத்தளங்களால் சற்று அதிக பாதகங்கள் ஏற்படுகின்றது இவற்றில் இருந்து விடுபடும் வழிகளை நாமே கண்டறிய வேண்டும்
ஓய்வு நேரங்களையும் பிரயோசனமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்  சமூக வலைத்தளங்களுக்கு நாம் அடிமையாகி விடாமல் சமூக வலைத்தளங்களை நமக்கு அடிமையாகி கொள்ளுதல் வேண்டும்.

மயூரினி 
கிழக்குப் பல்கலைக்கழகம்

Related posts