முக்கிய விடயங்கள் ஆராய தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான பல்வேறு முக்கிய காரணிகள் குறித்து ஆராய்வதற்காக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நாளை செவ்வாய்கிழமை கூடவுள்ளது. ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் நாளை காலை 10 மணியளவில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் ஆணைக்குழுவில் நடைபெறும் கலந்துரையாடல்களுக்கு ஏற்பவே இன்றைய கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. எனினும் இன்றைய தினம் விசேடமாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் வருகை மற்றும் வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து கூடுதல் அதானம் செலுத்தப்படும்.

இம்முறை புதியதொரு வழமையான சூழலில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக கடைபிடிக்கப்படவுள்ளன. எனவே வாக்களிப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் இதற்கான தீர்வு காணப்படவில்லை. எனவே இன்று குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கு வழமையான சூழல் இல்லாத காரணத்தால் அதற்கான உரிய நடவடிக்கைகள் பற்றி அவதானம் செலுத்தப்படவுள்ளது. இது வரையில் ஐரோப்பிய ஒன்றியம் , தாய்லாந்து , பொதுநலவாய அமைப்பு உள்ளிட்டவற்றிலிருந்து சர்வதேச கண்காணிப்பாளர் வருகை தருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது குறித்து தீர்க்கமாக அறிவிக்கப்படவில்லை என்று ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறினார்.

இவை தவிர தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் , வன்முறைகள் , வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் குறித்தும் நாளைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts